நில உடைமைகளை ஜூன் 30க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகை பெறும் 48,762 விவசாயிகளில், 37,211 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள அட்டை எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் பி.எம்.கிசான் கௌரவ நிதி உதவித் தொகை, மாநிலத்தில் சொட்டுநீர் பாசனக்கருவிகள், வேளாண் உபகரணங்கள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன் விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவித்து வருகிறது.
மத்திய அரசு வழங்கும் பி.எம்.கிசான் கௌரவ நிதி உதவித் தொகை விவசாயி அல்லாதவருக்கு சென்றுவிடக் கூடாது என இணைய வழியில் மத்திய அரசு பி.எம்.கிசான் கௌரவ நிதி உதவித் தொகை விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகை பெறும் 48,762 விவசாயிகளில், 37,211 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள அட்டை எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 11,551 விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத மற்றும் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த தவணை நிதி நிறுத்தப்படும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10,79,481 பட்டாக்களில் இதுவரை 75,156 பட்டாக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10,04,325 பட்டாக்களை பதிவு செய்யும் பொருட்டு விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா அல்லது கூட்டு பட்டா, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், அரசு கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு மானிய திட்டங்கள் அனைத்தும் இனிவரும் காலங்களில் விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே பயன்பெற முடியும்.
எனவே விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை உழவர்நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி உடனடியாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






