பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை


பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
x

அனைத்து பணியிடங்களிலும் மொத்தம் 10-க்கும் மேற்பட்ட நபர்களில் ஒரு பெண் பணிபுரிந்தாலும் கண்டிப்பாக அங்கு ஒரு மாத காலத்திற்குள் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து, பாதுகாக்கும் (தடுப்பு, விலக்கு மற்றும் தீர்வு) சட்டம் 2013-ன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி உள்ளக புகார் குழு அமைத்திட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி, சிறு குறு நிறுவனங்கள், அமைப்புச்சாரா பணியிடங்களில் மற்றும் பெரிய-சிறிய அளவிலான மளிகைக் கடைகள் முதலான அனைத்து பணியிடங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் (ஒரு பெண் பணியாளர் இருந்தாலும்) பணிபுரியும் பட்சத்தில் கண்டிப்பாக அங்கு ஒரு மாத காலத்திற்குள் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில் உள்ளக புகார்குழு அமைக்கப்படாமல் இருந்தாலும், சட்ட விதிமுறைகளை மீறினாலும் ரூ.50,000 அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும் குழு அமைக்கப்பட்ட விபரத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story