தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: துணை தாசில்தார்களை எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட துணை தாசில்தார்களை எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #Thoothukudi
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: துணை தாசில்தார்களை எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Published on

மதுரை,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி பேரணி நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் வந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயம் அடைந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com