தூத்துக்குடி: பறக்கும் படையினர் இதுவரை ரூ.52.69 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில் பறிமுதல் செய்ததில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு ரூ.45.34 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: பறக்கும் படையினர் இதுவரை ரூ.52.69 லட்சம் பறிமுதல்
Published on

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான இளம்பகவத் நேற்று வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் நேற்று வரை சிக்கிய பொருட்களின் மதிப்பு:

ரொக்கத் தொகை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சத்து 69 ஆயிரத்து 515 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலவசப் பொருட்கள்: வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்டதாகக் கருதப்படும் ரூ.7 லட்சத்து 24 ஆயிரத்து 740 மதிப்புள்ள இலவசப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுபானங்கள்: ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 297 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள்: சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 600 மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன.

விடுவிக்கப்பட்ட பொருட்கள்:

பறிமுதல் செய்யப்பட்டவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு விடுவிக்கப்பட்ட விவரம்:

ரூ.45 லட்சத்து 34 ஆயிரத்து 505 ரொக்கத் தொகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான இலவசப் பொருட்கள் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com