தூத்துக்குடி ஆணவக்கொலை: தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த தன் தங்கையை உடன் பிறந்த சகோதரன் மற்றும் தாயாரால் கொடூரமாகக் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
Published on

தூத்துக்குடி,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த வருடம் தூத்துக்குடியில் கவின் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை தமிழகம் இன்னும் மறக்கவில்லை. அதற்கு முன்பாக உடுமலை சங்கர், கோகுல்ராஜ் என ஆணவப் படுகொலைகள் தமிழகத்தையே உலுக்கிய வேளையில் மற்றுமோர் ஆணவக் படுகொலை அரங்கேறி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

மனிதநேயத்திற்கு எதிரானது

தூத்துக்குடியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த தன் தங்கையை உடன் பிறந்த சகோதரன் மற்றும் தாயாரால் கொடூரமாகக் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. காதலித்ததற்காகவும், சாதி மறுப்புத் திருமணத்தைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் உயிர்களைப் பலி வாங்கும் இந்தக் கொடூர மனநிலை, சமூக நீதி மற்றும் மனிதநேயத்திற்கு எதிரானது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கி மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் சமூக நீதியை நிலைநாட்டவும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முழுவீச்சில் செயல்படவைக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com