தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயில் கடம்பூரில் நின்று செல்லும்: எல்.முருகன் தகவல்

சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு ரெயில் பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயில் கடம்பூரில் நின்று செல்லும்: எல்.முருகன் தகவல்
Published on

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.

தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய ரெயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு ரெயில் பெண்ணாடம் ரெயில் நிலையத்திலும், தூத்துக்குடி-மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது.

இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com