தூத்துக்குடி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்


தூத்துக்குடி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
x

பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவர்-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும் தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெற, தற்போதைய தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை:

பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். எந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியாதவராகவோ, இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவராகவோ இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு, அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு சென்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story