ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இதற்கு முன்பு ஒரே நாளில் 2.16 லட்சம் டன் சரக்குகளை கையாண்டதே சாதனையாக இருந்தது.
ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளதாக துறைமுக ஆணையப் பொறுப்பில் உள்ள சுசாந்தகுமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு புதிய சாதனை

கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) சரக்குகளைக் கையாண்டு வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 631 மெட்ரிக் டன் கையாண்டதே சாதனையாக இருந்தது. இதில் நிலக்கரி 62 ஆயிரத்து 466 டன், அனல்மின் நிலக்கரி 49 ஆயிரத்து 67 டன், சுண்ணாம்புக்கல் 20 ஆயிரத்து 671 டன், கந்தக அமிலம் 10 ஆயிரத்து 188 டன், பாமாயில் 5 ஆயிரத்து 400 டன், சர்க்கரை 1,771 டன், பொது சரக்குகள் 774 டன், காற்றாலை இறக்கைகள் 68 டன் மற்றும் 66 ஆயிரத்து 927 டன் சரக்குப் பெட்டக சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன.

2.10 சதவீதம் வளர்ச்சி

வ.உ.சி. துறைமுகம் கடந்த ஆகஸ்ட் 2026 மாதத்தில் 35.35 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது ஆகஸ்ட் 2025 மாதத்துடன் (32.33 லட்சம் டன்) ஒப்பிடுகையில் 9.36 சதவீத வளர்ச்சியாகும். மேலும், ஏப்ரல் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலத்தில் மொத்தமாக 18.27 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தை விட 2.10 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடல்சார் நுழைவாயிலாக வலுப்பெறும்

வடக்கு சரக்கு தளம் 3-ல் தலா 124 டன் கையாளும்திறன் கொண்ட இரண்டு நகரும் பளுதூக்கிகளும், 1 முதல் 7 வரையிலான சரக்கு தளங்களில் 7 நகரும் பளுதூக்கிகளும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் எதிர்கால வளர்ச்சிக்காக சரக்கு தளம் 7 நவீன சரக்குப் பெட்டக முனையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் சரக்கு தளம் 10 உருவாக்குதல், வடக்கு சரக்கு தளம் 3-ஐ எந்திரமயமாக்குதல் மற்றும் சுங்க கட்டுப்பாட்டுப் பகுதியை 40 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்தல் போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் போது வ.உ.சி. துறைமுகம் கிழக்குக் கடற்கரையின் முக்கிய கடல்சார் நுழைவாயிலாக மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com