தூத்துக்குடி: குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை- கணவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
பெண் கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்யாநகரை சேர்ந்த கணேசன் (வயது 48), கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணேசன் இரண்டாவதாக மணியம்மாள்(42) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மணியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பெண் அடித்துக்கொலை:

இந்த நிலையில் நேற்று கணேசன் மதுரைக்கு சென்று தனது மனைவியை சமாதானமாக பேசி மீண்டும் அழைத்து வந்தார். ஆனால் வீட்டுக்கு வந்த உடனே மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், கம்பாலும், கையாலும் மணியம்மாளை சரமாரி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மணியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணேசன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

கணவர் கைது:

இதுகுறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மணியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. குடும்ப தகராறில் மனைவியை அவரது கணவரே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com