கடலூர் அருகே ஆயிரக்கணக்கான கோழிகள் இறப்பு...! கால்நடை பராமரிப்பு துறை ஆலோசனை

கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை மற்றும் வெயில் காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டது.
கோழிகள் சாவு கால்நடை பராமரிப்பு அதிகாரிகள் விளக்கம்
Published on: 

கடலூர்,

ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளதால், இறப்புக்கான காரணம் குறித்து கால்நடை பராமரிப்பு துறை ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான கோழிகள் இறப்பு

கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, தம்மனாம்பேட்டை, ஆலப்பாக்கம், சீனுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 11 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 6 பண்ணைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு, வெளியூர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை மற்றும் வெயில் காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டது. இதனால் 4 பண்ணைகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. நேற்று முன்தினம் மீண்டும் 2 பண்ணைகளில் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அடுத்தடுத்து இறந்துள்ளன. இதை பார்த்த பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் முருகவேல் தலைமையில் உதவி இயக்குனர் வேங்கடலட்சுமி மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோழிகள் எப்படி இறந்தன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இறந்த கோழிக ளின் மாதிரிகளை ஆய்வுக்காக நாமக்கல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்னும் முடிவு வெளியாகவில்லை. இதையடுத்து இறந்த கோழிகளை பாதுகாப்பாக பள்ளம் தோண்டி புதைக்க உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை கால்நடை பராமரிப்பு இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உதவி இயக்குனர் கனகசு சீலா வருகை தந்தார். அவர் கோழிகள் இறந்த 6 பண்ணைகளை ஆய்வு செய்தார். அப்போது கோழிகள் எப்படி திடீரென இறந்தது. உயிருடன் உள்ள கோழிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும், இறந்த கோழிகள் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டதா? என்றும் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

இது பற்றி கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் இது வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து உள்ளது. ஆனால் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு அறிக்கை முடிவு வந்த பிறகு தான் தெரிய வரும். முடிவு வரும் வரை இப்பகுதியில் உள்ள பண்ணைகளில் புதிதாக கோழிகள் வாங்கி வளர்க்க கூடாது என உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.

X