

சென்னை,
சூப்பர் எல்-நினோ தாக்கத்தை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
உலக அளவில் சூப்பர் எல்-நினோ நிகழ்வு பெரும் காலநிலை அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூப்பர் எல்நினோவின் ஆரம்ப தாக்கங்கள் ஏற்கனவே உணரப்படத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மேட்டூர் அணை 79 அடிக்கும், முல்லைப் பெரியாறு அணை 111 அடிக்கும் சரிந்துள்ளது. வைகை அணை வறண்டு காணப்படுகிறது. இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை இயல்புக்கு குறைவாகவும், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்புக்கு அதிகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வறட்சி, வெப்ப அலைகள், பருவமழை மாற்றங்கள், பெருமழை, வெள்ளப்பெருக்கு. விவசாயப் பாதிப்பு மற்றும் பேரிடர் சூழல்களை தமிழ்நாடு சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இந்த இயற்கைப் பெரு நிகழ்வை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.