"100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல்" - சசிகலா மீது மீண்டும் அ.தி.மு.க புகார்

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்வதாக தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
"100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல்" - சசிகலா மீது மீண்டும் அ.தி.மு.க புகார்
Published on: 

சென்னை

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சசிகலா நாளை மறுநாள் வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அமமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில், சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது.சசிகலா தலைமையில் நடத்தப்படும் பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகாரளித்தனர். சென்னையில் டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்த அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சசிகலா மீது மீண்டும் புகாரளித்தனர். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்வதாக தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

'டிஜிபியிடம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக மனு கொடுத்தோம். அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கு உரிமை இருப்பதாக கூறியிருந்தார். அதற்காக மனு கொடுத்தோம். தற்போது, பெங்களூருவில் ஊடகத்திடம் பேசியுள்ள சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள், அவர்களில் 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழகம் வரப்போவதாக கூறியுள்ளார்கள்.

அவர்கள் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அவர்களால் பொது மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட இருக்கிறார்கள். அவர்கள் தீட்டியுள்ள சதித் திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக புகார் கொடுத்திருக்கிறோம்,.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்கப்பட்டுவிட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சின்னம் சொந்தம் என தீர்ப்பு வந்தது. அதோடு அந்த சின்னத்தில் இடைத் தேர்தலில் போட்டியிட்டோம். சசிகலா இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும். அவர் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்பதால் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம் என கூறினார்.

X