தமிழக மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
தமிழக மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

சென்னை,

தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இதற்கிடையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன்பிடித்தனர்.

இந்த நிலையில், ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 3 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மீனவர்கள் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணை முடித்து மீனவர்கள் 3 பேரும் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடையச் செய்துள்ளது.

இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து 3 மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com