தி.மலை தீபத்திருவிழா: கண்காணிக்க குழு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம் தான்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on: 

சென்னை,

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகளைக் கண்காணிக்க உயர்மட்ட குழு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தீப விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம் தான். ஆன்மிக பூமி, சித்தர் பூமி, நினைத்தாலே முக்தியை தரும் அற்புதத் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலம். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகையன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது மகா புண்ணியம் என்பார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தநிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான அம்மணி அம்மான் மடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்ததாக சங்கர் என்பவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து டி.எஸ்.சங்கர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த ஜீவானந்தம், காலசாந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை உள்வாடகைக்கு விட்டதாகக்கூறி, அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என டி.எஸ்.சங்கர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

டி.எஸ்.சங்கருக்கு எதிரான வழக்கை விசாரித்த தனிநீதிபதி, அவரை அப்புறப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். அதேபோல, ஜீவானந்தத்தை அறங்காவலர் குழு தலைவர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளை எதிர்த்து, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் ஜீவானந்தம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வு, ஜீவானந்தம் தகுதிநீக்கத்தையும், அம்மணி அம்மான் மடத்தில் இருந்து டி.எஸ்.சங்கரை அப்புறப்படுத்த பிறப்பித்த உத்தரவையும் உறுதி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அம்மணி அம்மான் மடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால், அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி, அளந்து சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என அருணாச்சலேஸ்வரர் கோவில் செயல் அலுவலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மடத்துக்குள் அமைந்துள்ள அம்மணி அம்மான் கோவிலை புதுப்பிக்க வேண்டும். அந்தப் பகுதியில் காலியாக உள்ள 25 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பக்தர்கள் வளாகம் கட்ட வேண்டும். இந்த கட்டுமானத்தை 2027 மார்ச் இறுதிக்குள் தொடங்க வேண்டும். இந்த பக்தர்கள் வளாகத்துக்கு அம்மணி அம்மான் பெயர் சூட்ட வேண்டும். நிரந்தர கட்டிடம் கட்டும் வரை, அந்த நிலத்தில், தீப விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் என கோவிலின் செயல் அலுவலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து நவம்பர் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதைக் கண்காணிக்க பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில் அறநிலையத்துறை ஓய்வுபெற்ற இணை ஆணையர் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com