

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 10-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க இருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 15-ந்தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த கூடாரங்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள் பால், பழம் மற்றும் அன்னதானமாக வழங்கப்படும் ஒருவேளை உணவை சாப்பிட்டு விரதத்தை தொடருவார்கள். இந்த கூடாரங்கள் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடக்கிறது. அதாவது கூடாரங்களுக்கு பந்தல் அமைத்தல், கீழே அமர்வதற்கு பலகை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம், தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், கடற்கரை பகுதி, நகர் பகுதி மற்றும் நகரின் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், திருவிழா தொடங்குவதற்கு முன்பாக முடித்து தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.