திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பீகாரைச் சேர்ந்த 6 பேர் கைது

விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் வடமாநிலத்தைத் சேர்ந்த 2 பேர் நகைகளுக்கு பாலிஸ் போட்டு புது நகையாக மாற்றி தருவதாகக் கூறியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம், நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இந்துமதி என்ற பெண்ணிடம் நேற்று (22.5.2025) வடமாநிலத்தைத் சேர்ந்த 2 பேர் நகைகளுக்கு பாலிஸ் போட்டு புது நகையாக மாற்றி தருவதாகக் கூறியுள்ளனர். அப்பெண்ணும் இதை உண்மையென நம்பி கழுத்தில் இருந்த 12 கிராம் எடையுள்ள தங்க செயினை பாலிஸ் போட கொடுத்துள்ளார். பின்பு மேற்சொன்ன நபர்கள் சில ரசாயன பொருட்களை பயன்படுத்தி பாலிஸ் போட்டு கொடுத்துள்ளனர். அப்பெண்மணி தங்கச் செயினை வாங்கி பார்த்த போது சற்று நிறம் மங்கலாக தெரிந்ததால் அவர்கள் மீது சந்தேகப்பட்டு, தனது வீட்டின் அருகே குடியிருக்கும் தங்கஆசாரியிடம் தங்கச் செயினை கொடுத்து எடை பார்த்தபோது, எடை குறைவாக இருந்துள்ளது.
இதுகுறித்து இந்துமதி விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா புலன் விசாரணை மேற்கொண்டார். அதில், மேற்சொன்ன மோசடி செயலில் ஈடுபட்டவர்கள், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
மேற்சொன்ன மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, இளஞ்சிறார்களை கையகப்படுத்திய நாங்குநேரி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரசன்னாகுமார் மற்றும் விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.






