திருநெல்வேலி: 10 நாட்களுக்கு முன் தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்டாக் குடோன்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள திருநெல்வேலி டாஸ்மாக் குடோன் முன்பு இன்று டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு சிஐடியு சுமைப்பணி சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சுமைப்பணி சம்மேளனம் செயல் தலைவர் குணசேகரன், சிஐடியு மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் சரவணபெருமாள், சம்மேளன துணை தலைவர் ஆதிமூலம், மதுரை மண்டல டாஸ்மாக் குடோன் தலைவர் முனுசாமி உள்ளிட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி சிஐடியு சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஆண்டு போனஸை தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு கூலி வழங்க வேண்டும். பெட்டிக்கு ரூ.3.50 என ஒரே மாதிரி ஏற்றுக்கூலி என்பதை டெண்டர் படிவத்திலேயே உத்திரவாதப்படுத்த வேண்டும். HL என்ற பெயரில் சுமைப்பணித் தொழிலாளர்களின் கூலியில் மாதாமாதம் பணம் கட்டச் சொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். குடோன்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






