வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பெற்றோர் பதறியடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.
குழந்தை நிதிஷ்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை மாயம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை நிதிஷ். இன்று (செவ்வாய்க்கிழமை) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை வீட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடினர்.

தொட்டியில் விழுந்த குழந்தை

நீண்ட நேரத் தேடலுக்குப் பின், வீட்டின் அருகே இருந்த நிலத்தடி நீர் தொட்டியில் குழந்தை நிதிஷ் தவறி விழுந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பெற்றோர் பதறியடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.

போலீஸ் விசாரணை

ஆஸ்பத்திரியில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கூவல்குட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com