திருப்பத்தூர்: போலி மருத்துவம் பார்த்த 68 வயது முதியவர் சிக்கினார்

பி-பார்ம் பார்மசி படித்துவிட்டு சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது.
போலி மருத்துவர்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பேராம்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் இளங்கோ (68). இவர் விஷமங்கலம் பகுதியில் கிளினிக் ஒன்றை அமைத்து, நீண்ட வருடங்களாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

போலி மருத்துவம்

இந்த நிலையில், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட விஷமங்கலம் பகுதியில் முறையான மருத்துவப் படிப்பு இல்லாமல் போலி மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் இன்று விஷமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இளங்கோ (68) என்பவர், பி-பார்ம் பார்மசி படித்துவிட்டு சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது.

போலி மருத்துவர்

பி-பார்ம் படிப்பு என்பது மருந்துகளை பற்றிய அறிவியலே தவிர, நோயை கண்டறிந்து அலோபதி (ஆங்கில) முறைப்படி ஊசி போடுவதற்கோ, மாத்திரைகள் பரிந்துரைப்பதற்கோ சட்டப்பூர்வ உரிமத்தை வழங்காது. ஆனால் இவர் பத்தாண்டு காலமாக முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது மேலும் அவரிடமிருந்து மருத்துவத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com