திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம்: த.வெ.க. அரசு மன்னிப்பு கேட்கவேண்டும்- எல்.முருகன் வலியுறுத்தல்

இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டே தீருவது என்ற முனைப்புடன் இருக்கும் த.வெ.க. அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து தவறான வாதங்களை முன்வைத்து வருகிறது.
எல்.முருகன்
எல்.முருகன்
Published on: 

சென்னை,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும் உரிமை தொடர்பான வழக்கில், தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் கடும் கண்டனத்திற்குரியது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூண் வெறும் நில அளவை கல் என்றும், அதற்கு மத அடையாளம் கற்பிக்கப்படுவதாகவும் மதுரை கலெக்டர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதங்களை முன்வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபம் ஏற்றவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு காட்டும் முனைப்பு, இந்து சமூக மக்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டே தீருவது என்ற முனைப்புடன் இருக்கும் த.வெ.க. அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து தவறான வாதங்களை முன்வைத்து வருகிறது. த.வெ.க. அரசின் இந்து விரோத எண்ணம், முந்தைய தி.மு.க. அரசையும் விஞ்சி விட்டது.

பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் வாதங்களை முன்வைத்ததற்காக த.வெ.க. அரசு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்று, கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமையாகும். இதை செய்யத்தவறினால், த.வெ.க. அரசுக்கு தமிழக மக்கள் தக்க முறையில் பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X