திருப்பூர் சிறுமி விவகாரம்... தமிழக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி

குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா? என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பூர் சிறுமி விவகாரம்... தமிழக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி
Published on: 

சென்னை,

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசின் செயல்பாடுகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை! ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா முதல்-அமைச்சர் விஜய் அவர்களே? கேக் கொடுக்கும் அட்டையில் All is Well என்று எழுதி இருக்கிறார்களாம்.

உங்கள் ஆட்சியில் “Is all Well CM?”

குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா? உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்! இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்?

பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள். திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

X