பிரதமர் மோடி தமிழகம் வருகை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வருகை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தரகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது இந்த கூட்டணியின் 2ம் கட்ட தேர்தல் பிரசார கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

அதன்படி, புதுச்சேரி மற்றும் மதுரை என 2 இடங்களில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ளார். குஜராத்தில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று இரவு பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே நேரில் சென்று கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை வந்த பிரதமர் மோடி இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் நாளை காலை புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பின்னர் புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை வரும் பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து மதுரை செல்கிறார். மதுரை செல்லும் பிரதமர் மோடி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாஅ திருபரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். அதன்பின்னர் மதுரையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com