ராமேசுவரத்துக்கு பரிகாரம் செய்ய வந்தபோது சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு

ராமேசுவரத்துக்கு பரிகாரம் செய்ய வந்தபோது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ராமேசுவரத்துக்கு பரிகாரம் செய்ய வந்தபோது சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

ராமநாதபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்தவர் மாசானமுத்து (வயது 55). அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த கோவிலுக்கு, மீன்வியாபாரி ஒருவரின் மனைவியான 37 வயது பெண் உடல்நிலை சரியில்லை என்று வந்துள்ளார். அப்போது அவரிடம் மாசானமுத்து, ராமேசுவரம் சென்று பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கி உடல்நிலை சரியாவதுடன், குடும்ப பிரச்சினைகள் தீரும் என்று கூறியுள்ளார்.

இவரின் பேச்சை நம்பி அந்த பெண் தனது 15 வயது மகளை துணைக்கு அழைத்துக்கொண்டு பூசாரியுடன் ராமேசுவரம் வந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி அவர்கள் ராமேசுவரம் பகுதியில் பரிகாரம் செய்துள்ளனர். மறுநாள் காலையில் மேலும் ஒரு வழிபாடு செய்ய வேண்டி இருப்பதாக கூறியதால் அங்குள்ள விடுதியில் தங்கினர். அப்போது நள்ளிரவில் பூசாரி மாசானமுத்து, அந்த சிறுமியை தனது அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தனது தாயிடம் சிறுமி கூறினாள்.

இதுகுறித்து சிறுமியின் தாய், ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பூசாரி மாசானமுத்து மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்து நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார். அப்போது, பூசாரி மாசானமுத்துவுக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com