ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

பென்னாகரம்:

விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

நீர்வரத்து குறைந்தது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியல் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை அருகில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மெயின் அருவி, நடைபாதை ஆகியவை சேதமடைந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com