டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்

டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
ரேணுகா தேவி மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ரேணுகா தேவி மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். டி.ஆர்.பாலுவின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு பின்னணியாக இருந்து உதவிய மனைவி ரேணுகா தேவியின் மறைவு டி.ஆர்.பாலுவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ரேணுகா தேவியை இழந்து வாடும் டி.ஆர்.பாலு, அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.






