1,850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வியாபாரி கைது: லோடு ஆட்டோ, பைக் பறிமுதல்

தூத்துக்குடி அருகே பெரியநாயகிபுரம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வியாபாரி ஒருவரை கைது செய்தனர்.

பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி அருகேயுள்ள பெரியநாயகிபுரம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் முத்து, குடிமைப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஞானராஜ் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் மகாராஜா, வெங்கடேஷ், சதீஷ் ஆகியோர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

ரேஷன் அரிசி பதுக்கல்

அப்போது அப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகள் மற்றும் தலா 35 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகள் என மொத்தம் 40 மூட்டைகளில் 1,850 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

1,850 கிலோ ரேஷன் அரிசி, லோடு ஆட்டோ, பைக் பறிமுதல்- ஒருவர் கைது

உடனடியாக அதிகாரிகள் அந்த 1,850 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைக் மற்றும் லோடு ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மகேஷ் என்ற வியாபாரியை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து கைது செய்து, தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X