50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
Published on

நாகை மாவட்ட  கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரிய நெல் ரகங்கள்

பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அரசால் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் வினியோக செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா மற்றும் செங்கல்பட்டு சிறுகமணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் ரூ.25-க்கு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

10 கிலோ விதை

மொத்த விதையளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும்.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விதைகளைப் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com