போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,200 இடைக்கால நிவாரணம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,200 வழங்குவது எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,200 இடைக்கால நிவாரணம்
Published on

தாம்பரம்,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,200 வழங்குவது எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை 9 கட்டங்களாக நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் 24-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் யாஸ்மின் பேகம் பேச்சுவார்த்தை நடத்தியதில், போக்குவரத்து அமைச்சர் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 10-வது கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளர் தேவிதார், நிதித்துறை துணை செயலாளர் அனந்தகுமார், போக்குவரத்து இணை செயலாளர் நடராஜன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 47 தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஐகோர்ட்டு விசாரணை முடியும்வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.1,200 இந்த மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 9-ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது உரிய தகவல்களை தெரிவிப்பது என்றும், கோர்ட்டு விசாரணைக்கு பிறகு டிசம்பர் முதல் வாரத்தில் ஊதிய ஒப்பந்தம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதனை அறிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ஓய்வூதிய நிலுவைத் தொகையாக முதலில் ரூ.1,250 கோடி கொடுத்தோம். மீதம் உள்ள தொகையை எப்படி பிரித்துக் கொடுப்போம் என்பதை அக்டோபர் 9-ந்தேதி ஐகோர்ட்டில் தெரிவிப்போம். இடைக்கால நிவாரணம் ரூ.1,200 வழங்குவதால் மாதம் ரூ.15 கோடி கூடுதல் செலவாகும். டிசம்பர் மாதம் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள மற்ற பிரச்சினைகளுக்கு சுமுகதீர்வு காணப்படும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com