திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் 20 வயது இளைஞருக்கு நடந்த துயரம்

புதுமாப்பிள்ளையான பரசுராம் பைக்கில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மோதியது
திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் 20 வயது இளைஞருக்கு நடந்த துயரம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகர் மகன் பரசுராம் (வயது 20). தொழிலாளி. இவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காயத்ரி கோபித்துக்கொண்டு அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் இரவு வடகோவனூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பரசுராம் லெட்சுமாங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். கோரையாறு பாலம் அருகே சாலையில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பரசுராமை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரசுராம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com