கூட்ட நெரிசலால் விபரீதம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார்.
மாணவர் உயிரிழப்பு
Published on

மாமல்லபுரம்,

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் என்ற பேரம்பலம். இவரது மகன் தீனா (வயது 13). இவர், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல காரணை பஸ் நிறுத்தத்தில் இருந்து தடம் எண் 508 என்ற அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் தீனா, பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக தெரிகிறது.

விபத்து

வடகடம்பாடி என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது மாணவர் தீனா, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். பஸ்சின் பின்பக்க டயர் அவரது காலில் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் முறிந்து எலும்பு வெளியே வந்தது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் தீனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாணவர் பலியான சம்பவத்தால் அவர் படித்து வந்த அரசு மேல்நிலைப் பள்ளியே கடும் சோகத்தில் மூழ்கியது. இப்பகுதியில் பள்ளி நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணம் செய்வ தால் தற்போது ஒரு உயிர் பலி ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வீசாரணை

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com