

குன்றத்தூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே ஊஞ்சல் ஆடும்போது சேலை கழுத்தில் இறுக்கி 6-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மகள் கனிஷ்கா (வயது 12), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் சிசாந்த்(6). இந்த நிலையில் சிசாந்த் தூங்குவதற்காக வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி உள்ளனர். இந்த ஊஞ்சலில் நேற்று முன்தினம் கனிஷ்கா ஆடும்போது திடீரென சேலை கழுத்தில் இறுக்கியதில் மூச்சு விட முடியாமல் மயங்கினார். இதை பார்த்ததும் பதறிப்போன பெற்றோர் கனிஷ்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கனிஷ்கா இறந்து போனதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கனிஷ்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் கட்டி இருந்த சேலை ஊஞ்சலில் விளையாடும் போது கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.