போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்தால் அதன் தாக்கம் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளது.
ராமதாஸ்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வரும் ஜூன் 15 முதல் லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பது கவனத்திற்குரியதாகும்.

லாரி வாடகை

தமிழகத்தில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. மாநிலத்திற்குள் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருட்கள், தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் போக்குவரத்து லாரிகளை சார்ந்தே உள்ளது. இதனால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்தால் அதன் தாக்கம் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளது.

ஆனால் இந்த நிலைக்கு லாரி உரிமையாளர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. கடந்த சில ஆண்டுகளில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களும் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. வாகன காப்பீடு, உதிரி பாகங்கள், டயர் விலை, ஓட்டுநர் ஊதியம், பராமரிப்பு செலவுகள் என அனைத்தும் உயர்ந்துள்ளன. மேலும் வாகன தகுதிச் சான்று புதுப்பித்தல், அனுமதிச் சான்றுகள், கட்டாய உபகரணங்கள் பொருத்துதல், பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் பிற நிர்வாக கட்டணங்களும் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன.

நடவடிக்கை

எனவே, மத்திய அரசு டீசல் மீதான வரிச்சுமையை குறைப்பதற்கும், சுங்கச்சாவடி கட்டண உயர்வுகளை மறுபரிசீலனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு வணிக வாகனங்களுக்கான பல்வேறு கட்டணங்களில் சலுகைகளை வழங்கி, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் சரக்கு கட்டண உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்கள் மீது ஏற்படும் விலைவாசி சுமையையும் குறைக்க முடியும்.

அதேபோன்று, சேலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்ததன் காரணமாக பணிநீக்கப்படுவது வருத்தத்திற்குரியதாகும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் நீண்டகாலமாக நிரப்பப்படாத பணியிடங்கள் இருப்பதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்து சேவையை தாங்கி நிற்கும் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த பாதுகாப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகள் அனுபவத்துடன் பணியாற்றிய தொழிலாளர்களை திடீரென பணியில் இருந்து விலக்குவது அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.

எனவே, புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படும் சூழ்நிலையில் ஏற்கனவே பணியாற்றிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும், நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி, தகுதியான தொழிலாளர்களை நேரடியாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் போக்குவரத்து தேவையை நிறைவேற்றும் லாரி உரிமையாளர்களும், அரசு போக்குவரத்து சேவையை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் தமிழக பொருளாதாரத்தின் முக்கிய அங்கங்களாக உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களின் விலைவாசிச் சுமையும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

வலியுறுத்தல்

எனவே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் மற்றும் சேலம் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நலனையும் பொதுமக்களின் நலனையும் ஒருங்கிணைக்கும் நிலையான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com