

ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் தங்கா தோலா கிராமத்தைச் சேர்ந்தவர் தர்பாரி முர்மு (55 வயது). இவரது மனைவி மகி பாஸ்கி (50 வயது). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருந்தான். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அவர்களது உறவினர்கள் சிலர், திடீரென தர்பாரி முர்மு மற்றும் அவரது மனைவி, மகனை தாங்கள் கொண்டு வந்த கோடரியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொடூர கொலைகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த தம்பதியினர் மாந்திரீக பூஜை மூலம் சூனியம் செய்ததாக ஏற்பட்ட சந்தேகத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியை கொலையாளிகளிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
பழங்குடியின தம்பதி மற்றும் அவர்களது 12 வயது மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.