

சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில், 6 தொகுதிகளிலும் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால், திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல், சட்டசபையில் த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகியோர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதில், டாக்டர் சி.விஜயபாஸ்கரை தவிர ஏனைய 4 பேரும் த.வெ.க.வில் இணைந்துவிட்டனர்.
ஆளுங்கட்சியான த.வெ.க., இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று, பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியைத்தான் யாருக்கு ஒதுக்குவது என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திருச்சி கிழக்கில் போட்டியிட வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணைந்த 3 மூத்த நிர்வாகிகளும் அந்தத் தொகுதியை குறிவைத்து கேட்டுவருவதாக கூறப்படுகிறது. ஆனால், தவெகவோ அக்கட்சியில் நீண்ட காலம் பயணித்து வரும் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கலாமா என்று யோசித்து வருகிறது. இப்படி, த.வெ.க.வில் திருச்சி கிழக்கு தொகுதியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.
அதே நேரத்தில், எதிர்க்கட்சியான திமுகவில், திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை போட்டியிட வைக்க முயற்சி நடைபெறுகிறது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், ''எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். சரி என்று மட்டும் சொல்லுங்கள்'' என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோரிடம் கூறிவருகிறார்.
முன்னாள் அமைச்சர் கே.என்நேருவின் இந்த ஆர்வத்துக்கு வேறுவொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவினார். எனவே, திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கே.என்.நேருவுக்கும், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் முட்டல்-மோதல் இருந்து வருவதாக அக்கட்சியினரே கூறுகின்றனர். எனவே, அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியிடுவதை தடுக்க மு.க.ஸ்டாலின் களம் இறங்கினால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்திலேயே கே.என்.நேரு இவ்வாறு கூறிவருவதாக தெரிகிறது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை திருச்சி கிழக்கு தொகுதியில் யாரை களம் இறக்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம். த.வெ.க., தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் போட்டியிட்டால், குறிபிட்ட அந்தத் தொகுதியில் மட்டும் வேட்பாளரை இறக்காமல் இடைத்தேர்தலை புறக்கணித்துவிடலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம். ஆனாலும், இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவால் வேறு எதுவும் பிரச்சினை வருமா? என்றும் யோசித்து வருகிறாராம்.
இப்படி, திருச்சி கிழக்கு தொகுதி, 6 தொகுதி இடைத்தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்து, அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதுவும், பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், 'மாஸ்' காட்டுவதில் 2-வது இடத்தில் அம்பாசமுத்திரம் தொகுதி இருக்கிறது. எனவே, நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலைப் போல, நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.