

சென்னை,
திருச்சி மாவட்டத்தில் மூடப்பட்ட பழுதடைந்த காவிரி மேம்பாலத்தை மீண்டும் புதிதாக அமைத்துத் தருமாறு பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள 63 ஆண்டுகள் பழமையான காவிரி பழைய பாலத்தில் பழுது ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான பராமரிப்பு பணிகளுக்காக அப்பாலத்தை கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
பழைய பாலம் மூடப்பட்டிருந்த நிலையில் அனைத்து வாகனங்களும் அருகில் உள்ள புதிய பாலத்தின் வழியாக திருப்பப்பட்டன. அதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில் தினமும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலையைக் கடக்க நிரந்தர மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்துத் தருமாறு நீண்ட நாளாக மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை.
இந்த திடீர் போக்குவரத்து மாற்றத்தால் ஏற்பட்ட கடும் அவதி மற்றும் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி, சஞ்சீவி நகர் மற்றும் சர்க்கார்பாளையம் பொதுமக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH 38) அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி கோட்டை மற்றும் சத்திரம் பகுதி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகள் உரிய அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு போக்குவரத்து மெதுவாக சீரானது.