

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
தற்போதைய சூழலில் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான இடங்களைப் பெறுவதற்கு ஆதரவு கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் அருண்ராஜ், சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்டோர் வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், த.வெ.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பனையூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.