

மதுரை,
மதுரை பரவை மேலரதவீதி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த வர் சந்தோஷ்(வயது 24). த.வெ.க. பேரூர் நிர்வாகியான இவர், மினி வேன் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரை சேர்ந்த ரைஸ் மில் அதிபரான வக்கீல் செந்தில்குமார் என்பவருடைய மகள் தாரணியை (21) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மதுரை பனையூரில் உள்ள சொத்து தொடர்பாக மாமனார் செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் கணேஷ்குமார், சிவக்குமார், ஆகியோர் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் மரம் வெட்டியது தொடர்பாக செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர் சிவக்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ், மாமனார் செந்தில்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு சிவக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவக்குமார் மற்றும் செந்தில்குமார் தரப்பினர் சிலைமான் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் சந்தோஷ் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிலைமான் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு பரவையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். மதிய நேரத்தில் வீட்டின் முன் கதவை உடைத்து ஒரு கும்பல் திடீரென உள்ளே புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை அந்த கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இதுபற்றி சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.