

தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்' ராமகிருஷ்ணன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 37). ஸ்டூடியோ உரிமையாளரான இவர் த.வெ.க. ஆலங்குளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய பொறுப்பாளராக இருந்தார்.
இவருடைய மனைவி தெரசா. இவர்கள் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடையம் அருகே மூடப்பட்ட தனியார் கல்குவாரி குட்டையில் நேற்று காலையில் சக்திவேல் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் போலீசார் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சக்திவேல் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சக்திவேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.