பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு: தங்கம் தென்னரசு குற்றசாட்டு

பட்டாசு தொழிலை முடக்க தவெக அரசு முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு: தங்கம் தென்னரசு குற்றசாட்டு
Published on

சென்னை,

சிவகாசியில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தவெக அரசை கண்டித்தும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏ.வான தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

தவெக அரசு பொறுப்பேற்று 3 மாதத்தில் சிவகாசி பட்டாசு தொழிலை அடியோடு நசுக்க முயற்சிக்கிறது. பட்டாசுத் தொழில், தீப்பெட்டி தொழில் முடங்கினால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதனை தவெக அரசு உணர வேண்டும். சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் கவனக்குறைவால் நடைபெறும் விபத்துக்களை காரணம் காட்டி, இந்தத் தொழிலையே முடக்க தவெக அரசு முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?.

சட்டவிரோதமாக, உரிமம் இல்லாமல் பட்டாசு தொழிற்சாலை நடத்தினால் அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தீப ஒளி திருநாள் நெருங்கும் நேரத்தில் முறையான அனுமதி பெற்று நடக்கும் தொழிற்சாலைகளை முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. பட்டாசு தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு தருவோம், பட்டாசு ஆலை உள்ள ஒவ்வொரு 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் நடுவே தீயணைப்பு நிலையம் அமைப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, அது குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிக்காதது ஏன்?.

பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதராவாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வரும் சிறு, குறு வியாபாரிகளின் கடையில் ஆய்வு என்ற பெயரில் சென்று ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு. திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கான நிதியை குறைப்பது மட்டுமல்லாமல், திமுக-வின் மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களையும் மாற்றி வருகிறீர்கள். வெற்றி என அனைத்து திட்டங்களுக்கும் பெயர் வைக்கும் தவெக அரசு, அது வெற்றி திட்டமாக இல்லை. வெற்றுத் திட்டமாகத் தான் உள்ளது.

மாற்றம் தருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த தவெக, பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த தவெக, நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிதியையே குறைத்துவிட்டது. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்காக திமுக அரசு ஒதுக்கிய நிதியையும் தவெக அரசு பறித்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com