

மதுரை,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வார விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்ல பயணிகள் அதிகளவில் குவிந்தனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் இன்று காலை பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில் தெரிவித்திருப்பதாவது;-
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் எதுவும் இல்லாமல் 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததோடு, கூட்டத்தைப் பயன்படுத்தி நடத்துநர்கள் சிலர் ரூ.150 லஞ்சம் வசூலிக்கும் அளவிற்கு அலட்சியமாக செயல்பட்டு, பயணிகளைச் சாலை மறியலில் ஈடுபடும் நிலைக்கு தவெக அரசு தள்ளியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கோடை விடுமுறை முடியவிருக்கும் தருணத்தில், கூட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துகளை இயக்காமல், பயணிகளை அல்லாட வைப்பதுதான் தவெக அரசு முன்வைக்கும் "மாற்றம்" போலும்!
முன்பதிவு செய்த பயணிகளைப் பேருந்துகளில் இருந்து இறக்கிவிட்டு கூட்டத்தைக் குறைக்கலாம் என்பது போன்ற விஞ்ஞான தீர்வுகளை முன்வைப்பதை விடுத்து, இனியாவது போதிய பேருந்துகளை இயக்குவதற்கு தவெக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.