

சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;- தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகளில் கட்சி ஆட்சியை அமைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்று, குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களின் ஆதரவுடன் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஒரு ஓட்டாவது இருந்திருக்கிறது. இளைஞர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க.ஸ்டாலின் தன்னிடம் தெரிவிக்கவில்லை . மேகேதாட்டு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற அடிப்படையான கொள்கைகளிலிருந்து விலகாத வரை அவர்களை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் பேசியபோது, அவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். தமிழக மக்கள் மறுதேர்தலை விரும்பவில்லை என்பதுதான் என்னுடைய கணிப்பு. பின்னர், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜக பின் வாசலில் வந்து அரியணையில் அமர்ந்துவிடும்.
எங்களின் நிலைப்பாடு பொதுவான நிலைப்பாடு. திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுவது குறித்து எனக்கு தெரியாது. தெரியாத விசியத்தைப் பற்றி எப்படி கருத்து சொல்வது; இது எனது அறியாமையாக இருக்கலாம், அதேவேளையில் இது உங்களின் அறிவுக் கூர்மையாக இருக்கலாம். தவெக தற்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. 31 அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு அனுபவம் இல்லாதவர்கள். 101 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் வந்துள்ளார்கள். அவர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.