

சென்னை,
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய– மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி அரசு உருவாக்கி இருக்கிறது.மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.
ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, மத்திய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.