தேர்தலை சந்திக்க த.வெ.க. தயார்... தி.மு.க. தயாரா? - அமைச்சர் அருண்ராஜ்

எங்கள் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் அருண்ராஜ்
Published on

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசியபோது அவர் கூறியதாவது:

"இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2,500 முதல் 3,000 பேர் வரை அதிகளவில் நோயாளிகள் வருகின்றனர். இதயவியல் துறைக்கு மருத்துவர்கள் கூடுதலாக தேவை என்ற நிலை உள்ளது. எனவே மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். முழு உடல் சோதனை செய்வதற்கு இன்னொரு மையம் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருகிறோம்" என்றார்.

மருத்துவமனையில் மின்தடை பிரச்சினை:

"மின்சாரத்துறை அமைச்சரிடம், முதல்-அமைச்சரிடம் நாங்கள் மின்தடை பிரச்சினை குறித்து பேசியுள்ளோம். மருத்துவமனையில் மின்சாரத்தின் மூலம் இயங்கக்கூடிய உயிர்காக்கும் கருவிகள் பல உள்ளன. எனவே மருத்துவமனையில் மின்தடை ஏற்படாமல் இருப்பது குறித்து பேசி வருகிறோம். மின்தடை ஏற்பட்டால் அதற்கு தேவையான ஜெனரேட்டர் வசதிகள் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போதெல்லாம் இந்த ஆட்சி 3 மாதத்திற்குள் கலைந்துவிடும், 6 மாதத்திற்குள் கலைந்துவிடும் என்பது போன்ற கருத்துகளை பதிவு செய்து வருவது குறித்து தங்களது கருத்து என்ன என்று கேட்டபோது அமைச்சர் கூறியதாவது:

"ஒரு வேளை அப்படி நடந்தால், தேர்தலை சந்திக்க த.வெ.க. தயாராக உள்ளது. தி.மு.க. தயாராக உள்ளதா. எங்கள் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். ஒருவேளை எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது. மீண்டும் தேர்தலை சந்திக்கும் துணிச்சல் அவர்களுக்கு உள்ளதா.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com