

சென்னை,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு காவிரி பிரச்சினை பற்றி முழுமையாக எதுவுமே தெரியாது; அனுபவம் இல்லாததால் மற்ற கட்சிகளின் கருத்துகளை தவெக அரசு கேட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பை கூட காப்பாற்ற கூட முடியாத அரசாக தவெக அரசு உள்ளது. மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து காவிரி பிரச்சினை, மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவதை தவெக அரசு கேட்கவில்லை. கர்நாடக அரசு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகளை மதித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.
காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும். அதிமுக, திமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்டது. அதைபோல காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துக்களை பெற வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.