சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய்

நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்​டும் ஆஜராகுமாறு ​த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அங்கு சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். இந்தநிலையில், கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்.

அதில் 12-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். உடனடியாக விஜய்யிடம் விசாரணை தொடங்கியது. அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதன்படி கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா? , நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா? என விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக இதுவரை பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி விளக்கம் பெற்றுள்ள நிலையில் அதன் அடிப்படையிலும் பல கேள்விகளை விஜய்யிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக தவெக தலைவர் விஜய் இன்று மாலை தனி விமானத்தில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com