

சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் இணைந்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு ஆட்சியமைத்தது.
இதனையடுத்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு த.வெ.க. அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக தெரிவித்தன.
முன்னதாக த.வெ.க. அரசு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களை அவர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். அதே சமயம், த.வெ.க. அரசு அமைந்த பிறகு, தங்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சியினர் அனைவரையும் சேர்த்து கூட்டம் எதையும் இதுவரை நடத்தவில்லை.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க.வின் தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வரும் ஜூலை 1-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் என்.ஆனந்த் ஆகியோர் திருமாவளவனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பை திருமாவளவன் ஏற்றுக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்த மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் த.வெ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பது மட்டுமின்றி, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.