தவெக ஆட்சி 5 ஆண்டுகள் கூட நீடிக்காது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை.
எடப்பாடி பழனிசாமி
Published on

கோவை,

“தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைச்சர்கள் தங்களது துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை என்றும் குறிப்பிட்ட சில அமைச்சர்களே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக விமர்சித்தார். தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மின்சாரத் துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஊழல் அதிகரிப்பு

போக்குவரத்துத் துறையில் பழைய பேருந்துகளையே தொடர்ந்து இயக்குவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்படுகிறது என்றால் ஊழல் நடைபெறுகிறது என்பதுதானே அர்த்தம் ஊழலுக்கு இதற்கு சாட்சி என்றும் குற்றம்சாட்டினார்.

காஸ்ட்லி முதல்வர்

முதலமைச்சரின் மேட்டூர் அணை பயணம் குறித்து தனக்கு முழுமையான தகவல் தெரியாது எனக் கூறிய அவர், முன்னாள் முதலமைச்சர்கள் எளிமையாக அணையை திறந்து வைத்த நிலையில், தற்போது ஆடம்பர செலவுகள் அதிகரித்துள்ளதாகவும். மேலும் இந்த முதல்வர் ஒரு காஸ்ட்லி முதல்வர் என விமர்சித்தார். “அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்த கேள்விக்கு, விஜய் விரும்பினால் அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட ஆகலாம் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

5 ஆண்டுகள் நீடிக்காது

அதிமுகவில் இருந்து மேலும் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வார்கள் என்ற தகவலை நிராகரித்த அவர், ஏற்கனவே சென்ற எம்எல்ஏவே மீண்டும் பதவியில் தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி வருவதாக தெரிவித்தார்.மேலும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அதிகரிக்கும் கடன் மற்றும் வருவாய் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லாதது ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்பது அதன் செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com