தவெகவின் வெற்றி தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை - ராமதாஸ் வாழ்த்து

இது தமிழக வாக்காளர்களால் அளிக்கப்பட்ட ஒரு ஜனநாயக முடிவு என ராமதாஸ் தெரிவித்தார்.
தவெகவின் வெற்றி தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை - ராமதாஸ் வாழ்த்து
Published on

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இது தமிழக வாக்காளர்களால் அளிக்கப்பட்ட ஒரு ஜனநாயக முடிவாகும்.

ஊழலற்ற நேர்மையான அரசியல் மாற்றத்தை விஜய் அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை கொண்டு செயல்படுத்துவர் என்ற விருப்பத்தில் தமிழக இளையோர் சமூகம் மற்றும் மக்களும் நம்பிக்கையில் ஆதரவு அளித்து அவர்களின் வாக்குகளைக் கொண்டு மிகப் பெரிய ஒரு அங்கீகாரத்தை இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு அளித்துள்ளனர். மக்களின் ஜனநாயக உணர்வை நான் மதித்து வரவேற்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை ஆகும். தமிழக மாற்றத்திற்கான வித்தாக இந்த வெற்றியை ஏற்று புதிய அரசியல் பாதையில் அடி எடுத்து வைக்கும் விஜய் தமிழகத்தில் புதிய சகாப்தத்தை நோக்கி தமிழக வளர்ச்சிக்காகவும், தமிழக கலாசாரத்தை மேம்படுத்தவும், மது, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து தமிழத்தில் சமூக நீதியை நிலைநாட்டவும், கல்வி மற்றும் மருத்துவம் எளிய மக்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யவும் தனது வெற்றியைக் கொண்டு உத்வேகத்துடன் தமிழக மக்களுக்கு பணியாற்ற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com