முதல்-அமைச்சருக்கு உதவ இரு ஆலோசகர்கள் நியமனம்?

சட்டசபையில் தற்போதுள்ள நிலவரப்படி முதல்-அமைச்சருடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
முதல்-அமைச்சருக்கு உதவ இரு ஆலோசகர்கள் நியமனம்?
Published on

சென்னை,

கடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வுக்கு 108 இடங்கள் கிடைத்தது. இருந்தபோதும் பெரும்பான்மை இல்லாததால், அந்த கட்சியால் உடனடியாக ஆட்சி அமைக்க இயலவில்லை. எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தன.

அதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில் தமிழக அமைச்சரவைக்கு 23 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது.

அவர்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 23 பேருக்கும் நேற்று கிண்டி மக்கள் பவனில் நடந்த விழாவில் கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போதுள்ள நிலவரப்படி முதல்-அமைச்சருடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடியும்.

அதன்படி முதல்-அமைச்சர் உள்பட 35 அமைச்சர்கள் பணியாற்றலாம். தற்போது மொத்தம் 33 அமைச்சர்களே பதவி ஏற்றிருப்பதால், கூடுதலாக 2 அமைச்சர்களை சேர்க்க வழிவகை உள்ளது. அந்த இடங்களில் தலா ஒரு இடம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி த.வெ.க. அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இடம்பெற உள்ளது. அக்கட்சிகளை சேர்ந்த வன்னியரசு, ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக இன்று பதவி ஏற்கிறார்கள்.

இதனிடையே புதிய அமைச்சர்களுக்கு உடனடியாக நேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் செங்கோட்டையனின் இலாகாவும் மாற்றப்பட்டது.

அதாவது அவர் வகித்து வந்த நிதித்துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டது. செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டது. இலாகா ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் நலன், சிறுபான்மையினர் நலன் ஆகிய 2 துறைகளுக்கு மட்டும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய்க்கு உதவ இரு ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி த.வெ.க. கட்சியின் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி முதல்-அமைச்சரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொது விவகாரங்களுக்கு விஷ்ணு ரெட்டி என்பவர் முதல்-அமைச்சரின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷ்ணு ரெட்டி என்பவர் முதல்-அமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com