

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசு வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 3.30 மணிக்கு காலசந்தி தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார்.யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்கள் மற்றும் சிவன், பார்வதி உள்பட பரிவாரமூர்த்தி கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து 12 நாட்கள் விழா நடக்கின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. 7-ம் திருநாளான 16-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணி அளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 8-ம் திருநாளான 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
9-ம் திருநாள் முதல் 11-ம் திருநாள் வரையிலும் தினமும் மாலை 6 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி-அம்பாள் ஊஞ்சல் காட்சி நடைபெறும். 12-ம் திருநாளான 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுதலுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேருகிறார்கள். விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கந்த சஷ்டி விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நவ. 15ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து பகல் 3.20க்கு புறப்படும் ரயில் மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். அதேபோல, திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30க்கு புறப்பட்டு இரவு 8.50-க்கு நெல்லை சென்றடையும்